ஜெனரல் சரத் பொன்சேகா-இ.தொ.ஐ.முன்னணி முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.ஐ.முன்னணியின் பொதுச்செயலாளர் கணபதி கனகராஜ், நிதிச்செயலாளர் எஸ்.சிவசுந்தரம் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வித்துறையில் மலையகத்திற்குக் காட்டப்படும் பாரபட்சம், அரச தொழில் வாய்ப்பில் மலையக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை,தோட்டத்தொழிலாளர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள், மலையக ஆசிரியர் சமூகம் எதிர்நோக்கும் வீட்டு பிரச்சினைகள், மலையக சுகாதார துறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளும், மலையகத்தில் தமிழ் மொழி பயன்பாட்டின் அவசியம், அரச நிர்வாக கட்டமைப்பில் மலையக தமிழர்களுக்கான உரிமை தொடர்பில் இதுவரை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமை, மலையகத் தமிழர்களின் ஜனத்தொகை வீதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் எந்தவொரு பிரதிநிதிகள் சபையிலும் பிரதிபலிக்காமை போன்ற அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டன.
மலையக மக்களின் அடிப்படை, அரசியல் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வினை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடு அமையுமெனவும் முன்னணியின் பொது செயலாளர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
0 Response to "ஜெனரல் சரத் பொன்சேகா-இ.தொ.ஐ.முன்னணி முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை"
แสดงความคิดเห็น