jkr

யாழ். மாநகர சபையயின் மேம்பாட்டுப்பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை.

யாழ். மாநகரசபை நிர்வாகமானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் ஈபிடிபியினால் வென்றெடுக்கப்பட்டு அரசியல் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு வலுவூட்டும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நேரடியாக களத்தில் இறங்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட யாழ். வர்த்தக சங்க பிரதிநிகளும் தெரிவித்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று (05) அவர்களுடன் நீண்டநேரமாக ஆய்வு நடாத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் நேரடியாகவே களத்தில் இறங்கி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்போது அமைச்சருடன் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ உட்பட யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். வர்த்தக சங்க நிர்வாகப் பிரதிநிதிகள் என பலரும் உடன் சென்றனர். யாழ். நகர மத்தியிலுள்ள வண்ணார்குளத்திற்கு அதன் கிழக்கு மற்றும் மேற்கு என இரு பக்கங்களினாலும் சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குளத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக நேரடியாக பார்வையிட்டதுடன் மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவ்விடத்திலேயே ஆய்வு நடாத்தினார். இதன்போது முதற்கட்டமாக அவ்விடத்தில் வளர்ந்துள்ள பாரிய புற்கற்றைகளை அகற்றுவதென தீர்மானிக்கப்பட்டபோது அதற்கு ஏற்படும் செலவில் அரைவாசியை தாம் பொறுப்பேற்பதாக யாழ். வர்த்தக சங்க நிர்வாக பிரதிநிதிகள் தெரிவித்துக்கொண்டனர். இதனை சிறந்ததொரு முன்னுதாரணம் என தெரிவித்த அமைச்சர் அவர்கள் வர்த்தகர்களுக்கு பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து யாழ். சத்திரச்சந்தியிலுள்ள சத்திரம் ஞானவைரவர் கோவிலுக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கோவில் நிர்வாகத்தினர் உட்பட கூடியிருந்த அனைவருடனும் கலந்துரையாடினார். குறிப்பாக அங்கு இடம்பெற்றதாக கூறப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக எவருக்கு பாதகமில்லாதவகையில் ஓர் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடனும் பிறிதொரு தினத்தில் விரிவாக கலந்துரையாடுவதின் மூலம் சுமூகமானதொரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் எனத் தெரிவித்தார். மேலும் கோவிலை அண்டிய வெற்றுக்காணியை உடனடியாக துப்புரவு செய்து அங்கு துவிச்சக்கர வண்டித் தரிப்பு நிலையம் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அவ்விடத்தில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள 48 கடைத் தொகுதிகளை உடனடியாகத் திருத்தி பாவனைக்கு வழங்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க யாழ். மாநகர முதல்வரால் யாழ். மாநகர சபைப் பொறியியலாளருக்கு அவ்விடத்திலேயே அதற்குரிய பணிப்புரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து யாழ். நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள நவீன சந்தை கடைத்தொகுதிகளின் தற்போதைய நிலவரங்களை கூடிய அவதானத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார். இதன்போது அங்கு ஒரு தொகுதியில் தரையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளை மாடித்தொகுதிகளாக மாற்றுவதன் மூலம் பெருமளவிலான வியாபாரிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்பதுடன் மக்களின் தேவைகளையும் பெருமளவில் நிவிர்த்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்த யோசனையினை யாழ். மாநகர முதல்வர் ஏற்றுக் கொண்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். யாழ். நவீன சந்தை தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டபோது அதன் சுத்தம் சுகாதாரம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறும் அத்துடன் மின்சார வசதியற்று இருளாக உள்ள பகுதிகள் குறித்து காலதாமதமில்லாது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யாழ். மாநகர முதல்வருக்கு ஆலோசனை வழங்கினார்.

யாழ். நகரில் எவ்வித பாவனையும் இன்றி பல வருடங்களாக சில கடைத்தொகுதிகள் இருப்பதை யாழ். வர்த்தக சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக பூரண விபரங்களைப் பெற்று அத்தகைய கடைத்தொகுதிகளை உடனடிப் பாவனைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதல்வரிடம் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபையின் மேம்பாடு தொடர்பாக நேற்று மாலை தமது கவனத்தைச் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்ட நேரமாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்.மாநகர சபையின் பல்வேறு பகுதிகளுக்குப் பெரும்பாலும் கால்நடையாகவே சென்றதால் யாழ்.நகரத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குக் கைலாகு கொடுத்தும் வணக்கம் செலுத்தியும் அன்புடன் அளவளாவியதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். மாநகர சபையயின் மேம்பாட்டுப்பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates