jkr

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எண்ணை பயன்படுத்தி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை


atm-vavuniyaஇலங்கையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கைது; இலங்கை அரசு அதிகாரி தலைமறைவு

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்த, இலங்கையை சேர்ந்த 4 தமிழ் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு ஆட்டோ தாம்பரம் பக்கம் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த ஆட்டோவில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒரு `லேப்டாப் கம்ப்ïட்டர்', ஏராளமான ஏ.டி.எம். மற்றும் `கிரெடிட் கார்டு'கள் வைத்து இருந்தனர்.

செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேவியர்தன்ராஜ் உத்தரவுப்படி, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்தர்ராஜன், அலெக்சாண்டர், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தனித் தனியாக விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் ராஜேந்திரன் (வயது 47), கோனேஸ்வரன் (34), ராஜரத்தினம் (43), தர்ம நிஷாந்தன் (19) என்பது தெரிய வந்தது. இவர்கள், வெளிநாட்டில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டுகளின் ரகசிய குறியீடு எண்ணை தெரிந்து கொண்டு, பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்த மோசடி கும்பல் ஆகும். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் ராஜேந்திரன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் 1 வருடத்திற்கு முன்பு இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தேன். சென்னை தாம்பரத்தில் உள்ள ஆட்டோ டிரைவரான என் மச்சான் ராஜரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு, வவுனியாவில் இருந்து வந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கி இருந்த எனது நண்பர்களான கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகியோருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். அவர்களும் சரியான வேலை இல்லாமல் இருந்ததால் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

அப்போது வவுனியா மாவட்டத்தில், அரசு விளையாட்டுத் துறையில் அதிகாரியாக வேலை செய்து வரும் தன்ராஜ் (35) என்பவரின் நட்பு, இலங்கையில் உள்ள நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. அவர் மூலம், போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.தன்ராஜ் போலி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வித்தையை கற்றுத்தர, தமிழ்நாட்டிற்கு வந்தார். கணினி உதவியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்று தந்து விட்டு சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, நான், ராஜரத்தினம், கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகிய 4 பேரும் பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம் பகுதியில் உள்ள மடம் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தோம். பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க `கம்ப்ïட்டர்' மற்றும் `கார்பன் ரைட்டர்', ஏ.டி.எம். மையங்களில் உள்ள கதவை திறக்கப் பயன்படுத்தும் கருவி ஆகியவை வாங்கினோம்.

இந்த தகவல்களை, இலங்கையில் உள்ள தன்ராஜிடம் கூறினோம். நான் அனுப்பும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து பணம் எடுத்தால், கமிஷன் பணத்தை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை நான் சொல்லும் நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.அதன்படி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறீயிட்டு எண்களை, அங்கு உள்ளவர்களிடம் இருந்து வாங்கி, அதனை எங்களுக்கு தன்ராஜ் இ.மெயில் மூலம் அனுப்பினார். வாரம் 3 அல்லது 4 தொழில் அதிபர்களின் வங்கி ரகசிய எண்களை அவர் அனுப்புவார்.

நாங்கள் 30-க்கும் மேற்பட்ட பெட்ரோ கார்டுகளை வாங்கி சேகரித்தோம்.அந்த பெட்ரோல் கார்டின் பின்புறம் இருக்கும் ரகசிய எண்களை, கணினி மற்றும் கார்பன் ரைட்டர் மூலம் அழிப்போம். பின்னர் அதே இடத்தில், கணினி மூலம் தன்ராஜ் அனுப்பிய வெளிநாட்டு தொழில் அதிபர்களின் ரகசிய எண்களை பதிவு செய்து விடுவோம். இதேபோல வாரத்தில் சுமார் 5 போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்வோம். பின்னர், கார் மற்றும் ஆட்டோவில் பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம், கிழக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கனரா வங்கி, சிட்டி ïனியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று, போலியாக தயாரித்த கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்தோம்.

இப்படி கடந்த 7 மாதமாக இத்தொழிலில் ஈடுபட்டு, கோடி கணக்கில் பணத்தை எடுத்தோம். இதில் கமிஷன் போக, மீதிப் பணத்தை, தன்ராஜிடம் கொடுத்து விடுவோம். நாங்கள் போலி ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி எடுத்த பணம் எல்லாமே, வெளி நாட்டினர் பணம் என்பதால் இதுவரை எந்த வித சிக்கலிலும் நாங்கள் மாட்டிக் கொள்ள வில்லை.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்வரை பல்வேறு மையங்களில் இருந்து எடுத்து வருவோம்.இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.9 லட்சம் ரொக்கம், 20 சவரன் நகைகள், 4 செல்போன்கள், 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப் கம்ப்ïட்டர், வெப்கேமரா, இலங்கை அரசின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம். நம்பரை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரையும், போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு விளையாட்டுத்துறை அதிகாரி தன்ராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

-தினத்தந்தி-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எண்ணை பயன்படுத்தி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates