jkr

செய்தியறிக்கை


கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்
கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்

கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்

கோபன்ஹேகனில் சென்றவாரம் நடந்து முடிந்த காலநிலை மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றாடல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் வர்ணித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பில் அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்ஜென், நிஜமாகவே மாநாடு ஒரு மாபெரும் தோல்வி என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் மற்ற பாகங்களும், இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டு, மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாடு சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருந்தது என்றும் இதில் சிறியதொரு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது என்றும் ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைச்சர் நொர்பெர்ட் ரொயெட்ஜென் வர்ணித்துள்ளார்.


வங்க மொழியை ஐ. நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்கக் கோரிக்கை

வங்கதேச வைபவம் ஒன்றில் வங்கப் பெண்கள்
வங்கதேச வைபவம் ஒன்றில் வங்கப் பெண்கள்
வங்க மொழி ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

வங்க மொழி 25 கோடி மக்களால் பேசப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் வசிப்பவர்கள்.

இந்த கோரிக்கையை ஐ நா வுக்கு இந்திய நடுவணரசு அரசு அனுப்ப வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

செப்டம்பர் மாதம் ஐ நாவின் பொதுச் சபையில் பேசுகையில் வங்க மொழியை ஐ நாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வாதிட்டிருந்தார்.


புலியை கொன்று தின்ற சீனர்

அருகிவரும் இந்தோசீனப் புலியினம்
அருகிவரும் இந்தோசீனப் புலியினம்
புலி ஒன்றை கொன்று, தின்ற குற்றத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு 12 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென் மாகாணமான, யூனானில் தான் மீன் பிடிக்கச் செல்லுகையில், புலி தன்னை தாக்க வந்ததாகவும், தான் தற்பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல் நடத்தியதில் அந்தப் புலி செத்துவிட்டதாகவும் சம்மந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட புலி, அழிவின் விளிம்பில் இருக்கும், இந்தோசீன வகை புலியினத்தை சேர்ந்த வனத்தில் வாழும் கடைசி புலியாக இருக்கலாம் என்று யூகம் நிலவுகிறது.

புலியின் இறைச்சியை உண்ட குற்றத்திற்காகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்ட குற்றத்திற்காகவும் வேறு நான்கு பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கு காது மற்றும் மூக்கை வெட்ட உத்தரவு

பாகிஸ்தானில் இரு ஆண்களுக்கு அவர்களது மூக்கையும் காதுகளையும் வெட்டி எடுத்துவிடுவது என்ற ஒரு தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருந்த பெண்ணொருத்தியின் மூக்கையும் காதுகளையும் இவர்கள் வெட்டியிருந்தனர்.

பெண்ணைக் கடத்தி சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடவர் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய தண்டனை விதிக்கு ஏற்ப இந்த தீர்ப்பை வழங்குவதாக லாகூர் நகர நீதிபதி கூறியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் இவ்வகையான தண்டனைகள் மேல்முறையீட்டின்போது மாற்றப்பட்டு வந்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

'இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆர்வமில்லை'

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நாட்டின் பல பகுதிகளிலும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ள போதிலும், வடக்கே போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அத்தகைய ஆர்வத்தை காணமுடியவில்லை.

தமது துயர நிலைமைக்குச் சரியான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில் தேர்தல் குறித்துச் சிந்திப்பதற்கில்லை எனவும், தேர்தல் அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் தமக்குப் பல வருடங்களாகவே வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை எனவும் பல்தரப்பட்ட கருத்துக்களை இடம்பெயர்ந்த மக்கள் வெளியிடகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மிகுந்த சிரமத்தில் மட்டக்களப்பில் மீள் குடியேறிய மக்கள்

குடியிருப்புகள் கூட சரியாக அமைத்துத்தரப்படவில்லை என்று கூறுகிறார் இவர்
குடியிருப்புகள் கூட சரியாக அமைத்துத்தரப்படவில்லை என்று கூறுகிறார் இவர்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது நிலைமை இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களுக்கான குடியிருப்புகள் கூட சரியாக நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சரியான தங்கும் இட வசதி, உணவு வசதி போன்றவை இன்றி பல குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கோபன்ஹேகன் மாநாட்டு முடிவுகள் இந்திய இறைமையை பாதிக்காது என்கிறார் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கை, இந்தியாவின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டுக்கு முன்னதாக, இந்திய அரசு தான் அளித்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதாவது, கார்பன் வெளியீட்டு அளவை வெளியில் தெரிவிப்பது தொடர்பான தனது உறுதிமொழியில் இருந்து மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார். சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும், அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்காது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates