செய்தியறிக்கை
| | |
| அயதொல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி |
இரானில் அயதுல்லா மரணதுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி
இரான் அரசாங்கத்தின் விமர்சகரும் மூத்த மதபோதகருமான அயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி அவர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் நஜாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன. நஜாஃபாத்தில் தான் அயதொல்லா பிறந்தார்.
87 வயதான அயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தலைவர்களில் ஒருவர், ஆனால் பின்னர் அதிபர் அஹமெதிநிஜாத் அவர்களை வெளிப்படையாக இவர் குறை கூறினார்.
சிரியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வம் - லெபனான் பிரதமர்
| | |
| பஷர் அல் அஸ்ஸத் |
சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்துடன் டமாஸ்கஸ் நகரில், தான் அண்மையில் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அமைந்திருந்தன என்று லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தெரிவித்துள்ளார்.
தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல் ஹரிரியின் படுகொலைக்கு சிரியாதான் காரணம் என்று முன்பு சாத் அல் ஹரிரி குற்றம்சாட்டியிருந்தார்.
இருநாடுகளும் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தில் நல்லுறவை வளர்க்க முயலுகின்றன என்று ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் அடிப்படையில் என்றில்லாமல் இருநாடுகளுக்கும் பயன் தரும் கொள்கைகளின் அடிப்படையில் சிரியாவுடன் நல்லுறவுகளைக் கட்டியமைக்க லெபனான் விரும்புவதாக பிரதமர் ஹரிரி கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடும் குளிர்
| | |
| கடும் குளிர் |
கடும் குளிரால் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலந்தில் வெப்ப நிலை கிட்டதட்ட மைனஸ் இருபது பாகையை தொட்டு விட்டது. இதில் குறைந்தப்பட்சம் பதினைந்து பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு இல்லாதவர்கள் அல்லது குடித்துவிட்டு இரவில் வெளியே சுற்றியவர்கள்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனிகட்டிகள் கிடப்பதால் பல இடங்களில் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
பாதாள ரயில் பாதையில் ஐந்து ரயில்கள் பழுதடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு இடையேயான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கபட்டுள்ளது.
குவாண்டானாமோ சிறைவாசி தான் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்
| | |
| குவாந்தனாமோ சிறை |
குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சோமாலிய நாட்டை சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட போது தன்னை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததாகவும், அதன் பிறகு தன்னை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று அங்கு கடுமையாக சித்ரவதை செய்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து குவாண்டானாமோ கொண்டு சென்று தன்னை தனிமையில் சிறையில் அடைத்ததாகவும், அங்கு இருந்து வெளியே வந்தது கல்லறையில் இருந்து வந்தது போல இருப்பதாகவும் மொஹமது சுலைமைன் தெரிவித்தார்.
இவர் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.
| | |
| வவுனியா தேர்தல் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி |
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இடம்பெயர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படும் - தேர்தல் ஆணையாளர்
இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார்.
இதற்கென உரிய விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு,தேர்தல் திணைக்கள அதிகாரிகளின் ஊடாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தச் செயற்பாடுகள் திருப்திகரமாக இடம்பெறவில்லை எனவும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆண்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் சில தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் பதிவு செய்வதற்கான உரிமைகள் எவருக்கும் மறுக்கப்படவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொருத்தமட்டில் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பதிவுகளின்படி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வவுனியா தேர்தல் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா நாடு திரும்பினார்
| | |
| அலி சாகீர் மெளலானா |
இலங்கையின் கிழக்கே 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவுடன் தொடர்புபட்டிருந்தார் என்று பேசப்பட்டு அதன் காரணமாக எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடி நிலையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா மீண்டும் நாடு திம்பியுள்ளார்.
அந்நேரம் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமுன்றத்தில் பதவி வகித்த அவர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
ஆளும் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்காகவே தற்போது நாடு திரும்பியுள்ளதாக தமிழோசைக்கு தெரிவித்தார்
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் ஏன் - ஒரு அலசல்
| | |
| உணவுப் பொருட்களின் விலை உயர்வு |
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மைக் காலத்தில் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் கடந்த வாரம் நாடாளுமன்ற செயற்பாடுகளே ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்பட்டது. இந்தியாவில் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது என்றும் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்து கொண்டிருக்கின்றனர் என்று அரசு சொல்லி வரும் நிலையில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. ஆசிய நாடுகளின் வளர்ச்சி ஏற்றுமதியையே சார்ந்துள்ளது என்றும், அதன் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சினை ஏற்படும்போது அது மற்ற நாடுகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னையிலுள்ள லயோலா கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தலைவர் டாக்டர் ஜோசஃப் ஜெயபால் கருத்து வெளியிடுகிறார்.
முன்னர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது தொழிற் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும்இ இதன் காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் உணவு விநியோகத்திலும் சரியான கொள்கைகள் கிடையாது என்றும் கூறும் டாக்டர் ஜோசஃப் ஜெயபால் விவசாயத் துறையில் செய்யப்படும் முதலீடுகளும் பெருமளவில் குறைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
தமிழ் திரைப்படத்துறையின் எதிர்காலம் குறித்த அலசல்
| | |
| 'காஞ்சீவரம்' திரைப்படம் |
சமீபத்தில் இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பான FICCI திரைப்படத்துறையினருடன் இணைந்து சென்னையில் நடத்திய மாநாட்டில், பிரச்சினைகள் ஆங்காங்கே இருந்தாலும் தமிழ்த்திரைப்படத்தின் எதிர்காலம் சிறப்பாகவே இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள் பல தோல்வியடைகின்றன. அத்தகைய சூழலில் தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலைகுறித்து ஓர் அலசும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.







0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น