jkr

செய்தியறிக்கை


கோபன்ஹேகன் மாநாட்டில்
கோபன்ஹேகன் மாநாட்டில்

கோபன்ஹேகன் மாநாடு நிறைவை கொடுக்கவில்லை - பான் கீ மூன்

உலக பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டின் நிறைவில் ஏற்பட்டுள்ள விளைவு, எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த முடிவு அல்ல என்று ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறுகிறார்.

இரண்டு வார காலம் நடந்த பேச்சுவார்த்தைகளின் இறுதியில் மாநாட்டில் உரையாற்றிய பான் கீ மூன், ஆனாலும் இது அவசியமான ஓர் முதல் படி என வருணித்தார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் உருவான ஓர் ஒப்பந்தத்தை கவனத்தில் கொள்வதாக மட்டும் கூறி மாநாட்டின் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் கண்டு சில ஏழை நாடுகள் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

சட்டப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாக இந்த உடன்பாடு அமையாது.


ஆப்கானிஸ்தான் அமைச்சர்கள் பட்டியல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்
ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்

ஆப்கானிஸ்தானின் புதிய அமைச்சரவைக்கு தெரிவுசெய்யப்படக்கூடியர்கள் யார் யார் என்பது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் புரையோடிப்போயுள்ள ஊழலைக் களையப்போவதாக நாட்டின் அதிபர் ஹமீத் கர்சாய் வாக்குறுதி அறிவித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இது நடந்துள்ளது.

கொடையாளிகள் வழங்கிய நிதியில் பெருமளவை அபகரித்தவர்களாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் சுரங்கத்துறை அமைச்சரும், ஹஜ் விவகார அமைச்சரும், அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த முன்னாள் ஆயுதக்குழு தலைவரான இஸ்மாயில் கான் அமைச்சர் பட்டியலில் நீடிக்கிறார்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கொடையாளி நாடுகளது அழுத்தம் ஒரு புறம், தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவியவர்களுக்கு சலுகை காட்ட வேண்டிய தேவை ஒரு புறம் என்று இரண்டுக்கும் நடுவில் அதிபர் கர்சாய் சிக்கியுள்ளார் என பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


ஸர்தாரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஆளும் கட்சி நிராகரித்துள்ளது

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஸர்தாரி
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஸர்தாரி

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பை ரத்து செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில். அதிகாரத்தில் உள்ளவர்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஆளும் கட்சி நிராகரித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவாக பாதிக்கப்படுபவர்களில் நாட்டின் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரியும் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிற மூத்த பிரமுகர்களும் அடங்குவர்.

ஆட்சியை விட்டுவிடும் எண்ணம் தமது அரசாங்கத்துக்கு இல்லை என பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி பற்றி விவாதிப்பதற்காக தனது கட்சித் தலைவர்களுடன் அதிபர் ஸர்தாரி அவசர கூட்டம் ஒன்றை நடத்திவருகிறார்.

செய்தியரங்கம்
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

வந்தே மாதரத்தை தொடர்ந்து பாடுகிறேன் - ஏ.ஆர். ரஹ்மான்

இந்தியாவின் தேசிய பாடலாக இருக்கும் வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழா சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்றும் தியோபந்தி என்ற இஸ்லாமிய சமய அமைப்பு சில மாதங்கள் முன்பு தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது

வந்தே மாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொறுவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றும் ஒருவருடைய நம்பிக்கையையும் புரிதலையும் மற்றவர் மதிக்க வேண்டும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாக அவர் கூறினார்.

விண்ணத்தாண்டி வருவாயா என்ற படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க லண்டன் வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.


வெளிநாட்டில் தஞ்சம் புகும் நடவடிக்கையில் இந்தோனேசியாவில் தடுக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள்

இந்தோனேசிய வரைப்படம்
இந்தோனேசிய வரைப்படம்

ஆஸ்திரேலிய சுங்க இலாகா கப்பலில் கிட்டதட்ட ஒருமாத காலமாக தங்கியிருந்த 15 இலங்கை அகதிகள் இந்தோனேசியாவில் இருந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு செல்லும் இவர்கள் அங்கிருந்து வேறு மூன்று நாடுகளுக்கு செல்வார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியா அருகே சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அகதிகள் பயணித்த கப்பலில் சிக்கலில் மாட்டிய போது அவர்களை ஆஸ்திரேலிய கப்பல் மீட்டிருந்தது.

கப்பலில் இருந்த 78 பேரும் ஐ.நாவால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.


பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர்

முன்னாள் தலைவர்கள்
முன்னாள் தலைவர்கள்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை தொடர்ந்து கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பதிலாக 52 வயதான நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக மிக குறைந்த வயதில் தேர்தெடுக்கப்பட்டவர் என்றாகிறார் நிதின் கட்காரி.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பதவியில் இருந்து லால் கிருஷ்ண அத்வானி ராஜினாமா செய்த அடுத்த நாள் நிதின் கட்காரி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates