jkr

இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு-


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா இன்று வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்தியத் தூதுவருடன், பிரதித் தூதுவர் சிறீ விக்ரம் மிர்ஷி, தூதரக அரசியல்செயலர் சியாம் மற்றும் தூதரகத்தின் இராணுவஅதிகாரி ஆகியோhரும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர். மேற்படி தூதுக்குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களைப் பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையிருடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் ஆலய பரிபாலன சபை சார்பில் அதன் தலைவர் நமசிவாயம், செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த ஆலயத்தில் இராஜகோபுரம் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பரிபாலன சபையினர் முன்வைத்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் சிறப்பு தொடர்பிலும், அதனை மிகவும் சிறப்புற புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு விளக்கியதுடன், இராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு உதவும்படியும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துரைத்த இந்தியத் தூதுவர், இவ்விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும், இந்தியாவுடன் தொடர்புகொண்டு அங்கிருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியத் தூதுக்குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கச்சேரியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசஅதிபர் திரு.நீக்கிளாப்பிள்ளை தலைமை வகித்தார். இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பிரஜைகள் குழுவினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தின்போது இந்தியத் தூதுவரிடம் இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்வுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேள்விகளையும் கேட்டனர். இதற்கு பதிலளித்த இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, தாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்கின்ற உதவிகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறியதுடன், இந்திய, இலங்கை மீனவர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறான தீர்வினைக் காண்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் சுட்டிக்காட்டி, இந்தியாவினுடைய உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சரியான நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதையும், இதற்கு இந்தியா தனது முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு-"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates