7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
கட்டக்கில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் அருமையான அதிரடி துவக்கம் கொடுக்க, சச்சின் டெண்டுல்கர் இறுதி வரை நின்று 96 ரன்களை எடுக்க இந்தியா 42.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2- 1 என்று முன்னிலை வகித்துள்ளது.
ஸேவாக் அபாரமான துவக்கத்தை கொடுத்து 28 பந்துகளில் 44 ரன்களை எடுக்க, கம்பீரும், சச்சினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்களையும், யுவ்ராஜ், சச்சின் 3-வக்டு விக்கெட்டுக்கு 42 ரன்களையும் சேர்த்தனர். 169/3 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக், சச்சினுடன் இணைந்து 73 ரன்களை விக்கெட் இழக்கமல் சேர்த்தனர்.
கம்பீர் விக்கெட்டை ரந்திவ் அபாரமாக வீழ்த்தினார். ரவுன்ட் த விக்கெட்டில் வீசிய ரந்திவ் ஒரு பந்தை நல்ல லெந்தில் வீச அதனை கம்பீர் லெக் திசையில் ஆட முயல பந்து மட்டை வெளி விளிம்பில் பட்டு பௌலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
யுவ்ராஜ் சிங் 40 பந்துகளில் 23 ரன்களை எடுத்த யுவ்ராஜ் சிங், தன்னை கட்டுப்படுத்தியது பொறுக்காமல் வெலிகேத்ராவின் பந்தை மிக மோசமான ஷாட் ஒன்றை ஆடி சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் அபாரமான நிதானத்தையும், ஷாட் தேர்வில் புத்தி சாதுரியத்தையும் காண்பித்து 32 பந்துகளில் 5 பவுண்டர்கள் 1 சிக்சர் சகிதம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா பவர் பிளேயை எடுத்திருந்தால் சச்சின் தன் சதத்தை எடுத்திருப்பார். ஆனால் ஏனோ பவர் பிளேயை எடுக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் அபாரமான கவர் டிரைவ்கள், மிட்விக்கெட் பிளிக்குகள், அஜந்தா மென்டிஸ் பந்துகளை பெடல் ஷாட், தேர்ட் மேனில் தட்டி விடுதல் என்று கள இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார்.
104 பந்துகளை சந்தித்த சச்சின் 13 பவுண்டரிகளை அடித்து 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை அணியில் வெலிகேதரா 8 ஓவர்கள் வீசி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஆஃப் ஸ்பின்னர் ரந்திவ் 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மென்டிஸ் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 67 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இவர், மற்றும் மலிங்காவின் விக்கெட் எடுக்காத பந்து வீச்சினால் இலங்கை தோல்வி தழுவியது. இல்லையெனில் இந்தியாவிற்கு சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சச்சின் ஒரு முனையில் நின்று இலங்கையின் அது போன்ற சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது சச்சின் டெண்டுல்கரின் 93-வது ஒரு நாள் கிரிக்கெட் அரை சதமாகும்.
இலங்கை அணி, இந்தியாவின் பேட்டிங் பலத்தை நினைத்து மிகப்பெரிய ரன்களை எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் ஷாட்களை ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கடைசி 74 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தனர். இதுவே அவர்கள் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது. அதிகமான ஷாட்களை இலங்கை வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.
ரவிந்தர் ஜடேஜாவிற்கு இந்த போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் விருது வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ரவிந்தர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
0 Response to "7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி"
แสดงความคิดเห็น