சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் நான்காண்டு அமைச்சுப்பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் ஊடகவியலாளர் மாநாட்டில் எடுத்துவிளக்கப்பட்டது.
ஈபிடிபி செயலாளர் நாயகமும் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் நான்காண்டு அமைச்சுப்பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எடுத்துவிளக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்றையதினம் மாலை இடம்பெற்றது.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி ஜெகராஜசிங்கம் உட்பட அமைச்சின் சகல துறைகளையும் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். தற்போதைய அரசின் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சுப்பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் திருமதி ஜெகராஜசிங்கம் புள்ளிவிபரங்களின் ஆதாரத்துடன் விபரமாக எடுத்து விளக்கினார்.
சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் என்பதற்கு அப்பால் பொறுப்புவாய்ந்த ஒரு கட்சி என்ற வகையில் ஈபிடிபி செயலாளர் நாயகமாக தாம் விளங்கும் நிலையில் அமைச்சு நடவடிக்கைகள் தொடர்பாகவோ அல்லது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவோ ஊடகவியலாளர்கள் தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து பல தரப்பட்ட கேள்விகளையும் விளக்கங்களையும் ஊடகவியலாளர்கள் கேட்டறிந்தனர்.
குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஈபிடிபி தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிக்கும் என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே எனத்தெரிவித்தார். மேலும் எமது நாட்டின் அரசியல் சட்டத்தில் உள்ளதும் நாட்டின் தென்பகுதியில் நடைமுறையில் உள்ளதும் இந்தியாவின் அனுசரணையினை பெற்றுள்ளதுமான பதின்மூன்றாம் திருத்தத்தை ஆரம்பமாகக் கொண்டு அரசியல் தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும் எனத்தெரிவித்தார். ஒரு இலங்கையர் என்ற வகையில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தான் எதிர்க்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும் நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்பதாக தெரிவித்தார். மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்கள் இலங்கையர்களான தமிழர்களாகவும் தமிழர்களான இலங்கையர்களாகவும் ஐக்கிய இலங்கைக்குள் சகல உரிமைகளுடன் சமாதான சகவாழ்வு வாழவே விரும்புவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெருமளவிலான ஒலி ஒளி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களைச் சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)







0 Response to "சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் நான்காண்டு அமைச்சுப்பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் ஊடகவியலாளர் மாநாட்டில் எடுத்துவிளக்கப்பட்டது."
แสดงความคิดเห็น