ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவும் -உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பிலான பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மனுமீதான விசாரணையை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அவருக்குத் தற்போது வழங்கப்படுகின்ற பாதுகாப்பை அன்றைய தினம் வரையிலும் வழங்குமாறும் உத்தரவிட்டுள் ளது. தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கடுமையான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான நீதியரசர்களான காமினி அமரதுங்க, பி.ஏ ரத்நாயக்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை காலை 11.15 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளின் வாதங்களுடன் நண்பகல் 12.30 மணிவரையிலும் விசாரணை நடைபெற்றது.
மனுதாரர் சார்பில் சட்டதரணி ரொஷான் டி சில்வாவும் அரசாங்கத்தின் சார்பாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் மன்றில் ஆஜராகி வாத பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பாலித ரங்கே பண்டார, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர, பொதுச்செயலாளர் டிரான் அலஸ் ஆகியோர் மன்றில் பிரசன்னமாய் இருந்தனர்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அவ்வறையிலிருந்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை சேர்ந்த குமாரகே காஸபர் தேரர் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான அனுமதியை நீதியரசர்கள் குழாமிடம் கோரி நின்றார். அதற்கு இடமளிக்காத பிரதமர் நீதியரசர் தலைமையிலான குழு இடையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கான முறையொன்று இருப்பதாகவும் அதனடிப்படையில் மனுவை தாக்கல் செய்யுமாறும் அறிவுரை வழங்கினர்.
மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டதரணி ரொஷான் டி சில்வா 1970 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா நாட்டில் 30 வருடங்களாக புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தை இரண்டரை வருடங்களுக்குள் முடிவுக்குகொண்டுவந்துள்ளார்.
புலிகள் அமைப்பில் பல முக்கிய தலைவர்களை கொன்றொழித்துள்ளார் அதுமட்டுமன்றி அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளார். அவரின் உயிருக்கு எந்நேரத்திலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதனால் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும். சுற்றறிக்கையின் பிரகாரமும் கொள்கையின் அடிப்படையிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
முன்னாள் கடற்படை தளபதியான வசந்த கரணாகொட முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மனைவியான திருமதி கதிர்காமர் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் தொடர்கின்றது என்பதனால் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை உயர்மட்டத்தில் வைத்திருக்க வேண்டும். அவருக்கான பாதுகாப்பை நீங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகின்றது. இராணுவத்தளபதியாக இருந்தபோது வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பானது பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாகவே குறைக்கப்பட்டது.எனினும் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மனுதாரருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மனுதாரர் எதிர்வரும் தேர்தலின் வேட்பாளர் அவர் எந்த கட்சியிலும் போட்டியிடலாம் அது அவரின் உரிமையாகும். அவருக்கான பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமன்றி பாதுகாப்பு உட்கட்டமைப்பு, தொலைப்பேசி வசதிகள் உள்ளிட்ட வாய்ப்புகளை செய்துக்கொடுக்கவேண்டும்.
மனுதாரர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் அவருக்கு ஒரு நாளில் கூடுதலான பாதுகாப்பை வழங்கி அந்த பாதுகாப்பை மறுநாளைக்கும் வழங்குவதற்கு மறுப்பது ஏன்? என்று வாதிட்டார்.
நீதியரசர்; சேவையிலிருந்து அவர் ஓய்வுபெற்றுவிட்டார்.
சட்டதரணி; மனுதாரர் முன்னாள் இராணுவ தளபதி, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி அவருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. குண்டு துளைக்காத காரொன்றும், டபள்கெப் ரக வாகனங்கள் இரண்டும், வழங்கப்பட்டுள்ளது அவருக்கு குறைந்தது குண்டுத்துளைக்காத மூன்று கார்களும், வாகன தொடரணி செல்லக்கூடிய வகையில் கெப்ரக வாகனங்கள் மூன்றையும் வழங்கவேண்டும்.
நீதியரசர்; ஏனைய மக்கள் எங்கே செல்வர், பாதுகாப்பிற்கு எதனையும் கேட்கமுடியாதே?
சட்டதரணி; நாட்டிலிருக்கின்ற இரண்டொரு பேருக்கு இவ்வாறான பாதுகாப்பு தேவை, அவ்வாறான பாதுகாப்பு பொதுமக்களுக்கோ, எனக்கோ தேவையில்லை
நீதியரசர்; தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு என்ன?
சட்டதரணி; குண்டு துளைக்காத காரொன்றும் ஜீப்கள் இரண்டும் வழங்கப்பட்டுள்ளன
நீதியரசர்; ஆறு கார்களை கேட்கமுடியாது
சட்டதரணி; அவ்வாறு நான் கேட்கவில்லை, வீட்டிற்கு நான்கு பின்புறங்கள் இருக்கின்றன முன்வாயிலுக்கு பாதுகாப்பும், பாதுகாப்பு கூண்டுகள் மூன்றும் தேவை, காரியாலயம் இருப்பதனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தனியான பாதுகாப்பும் அதற்கேற்ற பாதுகாப்பான வீடும் தேவை. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டதரணி தனது வாதத்தை அரைமணித்தியாலத்திற்குள் நிறைவு செய்துக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் சார்பாக ஆஜரான சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தனது பிரதிவாதங்களை முன்வைத்தார்.
மனுதாரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டரீதியில் எவ்விதமான அடிப்படையும் இல்லாதவை, மனுதாரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். அவருக்கு கொழும்பு7 பௌத்தாலோக்க மாவத்தையில் வீடொன்று இருகிறது . மனுதாரர் வேட்பாளர் கோரிநிற்பது அரசியல் காரணங்களுக்கானது என்பதனால் இது ஒருபோதும் பொருந்தாது.
ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரகாரம் கமாண்டோ படையணியைச்சேர்ந்த ஒருவர், படைவீரர்கள் 20 பேர் , சிங்க ரெஜிமென்டை சேர்ந்த வீரர்கள் மூவர் அதே படையணியைச்சேர்ந்த 50 வீரர்கள், கெப்டன் ஒருவர், அதிகாரி தரத்திலான ஒருவர், பெண்களை சோதனைக்கு உட்படுத்துவதற்கு பெண்கள் ஐவருமாக சாரதிகள் உட்பட மொத்தமாக 83 பேரையும் கோரியிருந்தார்.
சமிக்ஞை இயந்திரம், 9 மில்லிமீற்றர் ரக 10 பிஸ்டல்கள், மினிபூசி ரக 10 எம்பி ஆயுதம், ரீ 56 ரக துப்பாக்கிகள் 72 , தொகுதியுடனான வோக்கிடோக்கி 10 உள்ளிட்ட ஆயுதங்களையும் கோரியிருந்தார். அத்துடன், தற்போது பாதுகாப்பிலிருக்கும் வீரர்களை விலக்கிகொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த கடிதத்திற்கு அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கமான்டோ படையணியைச் சேர்நத்த 10 படையினர், சிங்க ரெஜிமென்டை சேர்ந்த இருவரும் வீரர்கள் 50 பேரும் குண்டுத்துளைக்காத வாகனமொன்றும் லேன்ரோவர் வாகனம் இரண்டும் , சாரதிகள் உட்பட 66 பேரும் வழங்கப்பட்டுள்ளது.ஆயுதங்களை வழங்குவது தொடர்பில் இராணுவத்தளபதியே தீர்மானம் எடுப்பார் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மேஜர் பன்னிப்பிட்டியவிற்கு வாகனமொன்றும், வான்கள் இரண்டும் பாதுகாப்பு தொடரணிக்கென அறுவர் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது, 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாத சுற்றரிக்கையின் பிரகாரம் உயரதிகாரிகளுக்கு காரொன்றும் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டுமே வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் ஓய்வுபெற்ற படையதிகாரி ஒருவருக்கு அமைச்சரவையின் அங்கீகாரம், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரப்பட்டிருந்த போது சிவில் பாதுகாப்பிற்கென 83 பேர் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தளபதி, கூட்டுப்படைகளின் தளபதி உள்ளிட்ட கமாண்டோக்களுக்கு சாரதிகள் நால்வர் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. முன்னாள் இராணுவத் தளபதி முனசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் இரண்டு நாட்கள் மட்டுமே வாசஸ்தலத்திலிருந்தார். லயனல் பலகல்ல ஓய்வுபெற்ற தினத்தன்றே வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிவிட்டார். கோட்டே கொட பதவி விலகிய நான்கு நாட்களுக்குள் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
மனுதாரரோ ஓய்வு பெற்றுக்கொள்வதற்கான கடிதத்தை வழங்கிவிட்டு இன்றுவரையிலும் வாசஸ்தலத்திலேயே இருக்கின்றார், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் மனுவில் சட்டரீதியிலான செயன்முறைகள் இல்லை. இவ்வளவும் வழங்கப்பட்டதன் பின்னர் இன்னும் என்ன? தேவைப்படுகின்றது, மனுதாரர் அரசியல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் , ஓய்வுபெற்றதன் பின்னர் கோரமுடியாது ஏனெனில் அவர் சாதாரண சிவில் பிரஜை இவையாவும் நீதியின் 12(1) ஆம் பிரிவை மூடிவிட்டது என்றார். பிரதிவாதத்திற்கு பின்னர் மனுதாரர் சார்பில் வாதங்களை முன்வைத்த சட்டதரணி ரொஷான் டி சில்வா எந்தவொரு நபருக்கும் வாழ்வதற்காக உரிமை உண்டு அது மனித உரிமையாகும் ஐந்து நீதியரசர்கள் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நபரின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது என்று பிரசுரமொன்றில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
நீதியரசர் ; ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால்? சில தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச சட்டதரணி; பிரசுரத்தில் வெளியானமை தொடர்பில் பிரஸ்தாபிக்க முடியாது இது பிரச்சினையை மென்மேலும் தூண்டுகின்ற நடவடிக்கையாகும் .
சட்டதரணி; ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் மனுதாரருக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை .
அரசாங்க சட்டதரணி ;யுத்தம் நிறைவடைந்து விட்டது .
சட்டதரணி; எனக்கோ உங்களுக்கோ( அரசாங்க சட்டதரணி) பாதுகாப்பு தேவைப்படாது நாம் எங்கே வேண்டுமானாலும் பாதுகாப்பின்றி சென்றுவரலாம் ஆனால் சில நபர்களுக்கு பாதுகாப்பு முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார். வாதப்பிரதிவாதங்களை அவதானித்த பிரதமர் நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் மூவர் கொண்ட குழு மனுதாரருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பிலான பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டதுடன் மனுமீதான விசாரணையை எதிர்வரும் 11 ஆம் திகதி ஒத்திவைத்தனர்.
அத்துடன், இடையீட்டு மனுவை உரிமை முறைப்படி சமர்ப்பிக்குமாறும் மன்றுக்கு ஏதாவது கூறவிருப்பதாயின் அன்றையதினம் கூறுமாறும் தேரருக்கு அறிவுரை வழங்கினர்.
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியான சரத் பொன்சேகா தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கடுமையான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுக்கு கடற்படை வீரர்கள் 500 பேரும் இராணுவத்தளபதிக்கு 400 கடற்படை வீரர்களும் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தளபதியான தனக்கு கொமாண்டோ படையணியைச்சேர்ந்த 10 படையினரும், ஏனைய படைவீரர்கள் 50 பேரும் குண்டுதுளைக்காத வாகமொன்றுமே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனக்கென வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருக்கின்றது என்று இம்மனுவில் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனது பாதுகாப்பிற்கென 600 படையினரையும் கொமாண்டோ படையினர் 10 பேரையும் குண்டுதுளைக்காத இரண்டு வாகனங்களையும் வழங்க வேண்டும். அத்துடன், தான் வசித்துவந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையானது தனது பாதுகாப்பிற்கு சவாலாக இருக்கின்றமையினால் அந்த இல்லத்தில் தொடர்ந்தும் வசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். இம்மனுவில் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி, ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.







0 Response to "ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவும் -உயர்நீதிமன்றம் உத்தரவு"
แสดงความคิดเห็น