வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விரைவில் மீள் குடியேற்றம்:பசில் ராஜபக்ஷ

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களில் முதற் கட்டமாக 4500 பேரை மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 'வடக்கின் வசந்தம்' செயலணிக் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களை அவர்களின் சொந்த இருப்பிடங்களில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரிடம் இச்சந்திப்பின் போது சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ முதற்கட்டமாக 4500 பேரை விரைவில் மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏனையோரின் மீள் குடியேற்றம் தொடர்பாக வலிகாமம் வடக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூதூர் கிழக்கு சம்பூர் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் ,வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் ஆகியவற்றிற்கு மக்கள் தமது வழழிபாட்டின் நிமித்தம் சென்று வர அனுமதியழிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை தங்களால் முன் வைக்கப்பட்ட போது இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தங்களிடம் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா கூறுகின்றார்.
அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் விடுதலையை துரிதப்படுத்துதல் ,மன்னார் - மதவாச்சி வீதியில் தற்போது அமுலிலுள்ள 5 வீதித் தடைச் சோதனைகளுக்கு பதிலாக பறையனாளன்குளத்தில் மட்டும் பயணிகள் சோதனையிடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.







0 Response to "வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விரைவில் மீள் குடியேற்றம்:பசில் ராஜபக்ஷ"
แสดงความคิดเห็น