பாராளுமன்றம் சக்திபெறும் வரையிலும் நிறைவேற்று முறைமையை ஒழிக்க முடியாது-அமைச்சர் ஜி.எல். தெரிவிப்பு;

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் ,அமைச்சரவை, அரசியல் கட்சி இந்த மூன்றும்நிறைவேற்று அதிகார முறைமையின் இதயமாகும். அந்த முறைமையினை நினைத்தபடி மாற்ற முடியாது. பாராளுமன்றம் சக்தி பெறும் வரையிலும் நிறைவேற்று அதிகார முறைமையினை ஒழிக்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஆசியாவிலேயே இந்தியாவை அடுத்து இலங்கையிலேயே அரசியல் ஸ்திரதன்மையும் உள்ளக ஸ்திரதன்மையும் இருக்கின்றது. இந்திராகாந்தியை தோற்கடிப்பதற்காக கட்சிகள் எவ்விதமான இணக்கப்பாடும் இன்றி இணைந்துக்கொண்ட அவ்வாறான நிலைமையே இங்கும் இன்றிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
ஜெனரல் சரத் பொன்சேகா முன்னெடுக்கவிருகின்ற வேலைத்திட்டம் என்ன? அதன் மூலமாக நாட்டிற்கு என்ன? கிடைக்கவிருக்கின்றது. சரத் பொன்சேகா ஜனாதிபதியாகிவிட்டார் என நினைத்துக்கொண்டால் அவரால் எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க முடியும்.
அரசியலமைப்பை மாற்றவேண்டுமாயின் அல்லது அதில் திருத்தங்களை கொண்டுவரவேண்டுமாயின் இல்லையேல் சரத்துக்களை நீக்கவேண்டுமாயின் சில நிபந்தனைகள் இருக்கின்றன. உதாரணமாக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். இவற்றை செய்வதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். விசேடமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமைக்கும் பாராளுமன்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. சட்டமூலமொன்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுகின்றது.
வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி தேவை. அதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றம் வழங்குகின்றது. சரத் பொன்சேகாவிற்கு கட்சிகள் தனித்தனியாக ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன. எனினும் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாடொன்று எட்டப்பட வில்லை. கொள்கையும் இல்லை. அடிப்படை கொள்கையிலும் இணக்கம் எட்டப்படவில்லை. மொத்தத்தில் முற்றுமுழுதாக கட்சிகள் எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றத்திற்கு அன்னியோனிய தொடர்பும் கூட்டுப்பொறுப்புக்கொண்ட அமைச்சரவையுடன் தொடர்பும் கொண்டிருக்கவேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் கட்சியொன்றின் தலைவராக இருக்கவேண்டும், சரத் பொன்சேகாவிற்கு கட்சியொன்றில்லை. அவ்வறான ஜனாதிபதி நாட்டில் இருக்கவே இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஏற்படுத்தப்படவிருக்கின்ற பதில் அரசாங்கத்தில் யார்? தலைவர், தலைமை பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டால் அல்லது அவரை நியமித்தால் ஜே.வி.பி அதனை எதிர்க்கும் இதுதான் யாதார்த்தமாகும். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் ,அமைச்சரவை, அரசியல் கட்சி இந்த மூன்றும் நிறைவேற்று அதிகார முறைமையின் இதயமாகும்.இந்த மூன்றும் இல்லாத நிறைவேற்று அதிகாரமானது மிதக்கும் அதிகாரமாகும். கொங்கிறீட் இல்லாமல் ஆட்டம் காணும். அராஜக நிலைமையினை தோற்றுவிக்கும். நாட்டின் நிர்வாகத்தை முன்கொண்டு செல்லமுடியாத நிலைமை ஏற்படும்.
அரசியல் ஸ்திரத்தன்மையினால் நாட்டிற்கு முதலீடுகள் அதிகரித்துள்ளன. சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரித்துள்ளது இவ்வாறான நிலையில் கொள்கைகள், இணக்கப்பாடுகள் இன்றி கட்சிகள் இணைந்துள்ளன அன்று இந்திரா காந்தியை தோல்வியடையச் செய்வதற்காக கட்சிகள் கொள்கையின்றி எவ்விதமான இணக்கப்பõவும் இன்று இணைந்திருந்தன. நிறைவேற்று அதிகார முறைமையை 160நாட்களில் அல்ல 600 நாட்கள் சென்றாலும் முறைமையினை இல்லாதொழிக்க முடியாது. நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாது செய்வதாக கூறி சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்
விகிதாசார முறைமை இருந்திருந்தால் சக்திவாய்ந்த பாராளுமன்றமொன்று இருந்திருக்காது. யுத்தத்தையும் வெற்றிக்கொண்டிருக்கமுடியாது. தொகுதிவாரி முறைமையினால் 5/6 பெரும்பான்மையும் கிடைத்தது. ஆசியாவிலேயே இந்தியாவை அடுத்து இலங்கையிலேயே அரசியல் ஸ்திரதன்மையும் உள்ளக ஸ்திரதன்மையும் இருக்கின்றது என்றார்.







0 Response to "பாராளுமன்றம் சக்திபெறும் வரையிலும் நிறைவேற்று முறைமையை ஒழிக்க முடியாது-அமைச்சர் ஜி.எல். தெரிவிப்பு;"
แสดงความคิดเห็น